குறைந்த வருமானத்திற்காக சொந்த ஊரை, குடும்பத்தினரை விட்டு வெளிமாநிலங்களுக்கு பணிக்காகச் சென்று அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு இடையே தற்போது சொந்த ஊருக்குச் செல்வதே புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பெரும் இன்னலாக அமைந்துள்ளது.
ஊரடங்கால் வேலையின்றி அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் சென்றாவது உயிர் வாழலாம் என எண்ணி கால்கடுக்க நடையாய் நடந்தும், கிடைக்கும் போக்குவரத்துகளை பயன்படுத்தியும் சென்று கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறு செல்லும் வழிகளில் குடிக்க தண்ணீரில்லாமல், உண்ண உணவு கிடைக்காமல் பல்வேறு தவிப்புகளை கடந்து சென்றாலும் விபத்துகளும் வெளி மாநிலத்தொழிலாளர்களை விட்டுவைக்கவில்லை. தினந்தோறும் கணிசமான தொழிலாளர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டும், விபத்துகளில் சிக்கியும் உயிரிழப்பதே தொடர்கதையாகி வருகிறது.
உயிருடன் இருக்கும்போது கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு மடிந்தும் அந்த கஷ்டங்கள் தீர்ந்தபாடில்லை. அப்படியான சம்பவங்களே அண்மைக் காலங்களாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில், ராஜஸ்தானில் பணியாற்றி வந்த பீகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 60 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 4ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சொந்த ஊருக்குச் செல்ல எத்தனித்து லாரியில் புறப்பட்டிருக்கிறார்கள்.
அவ்வாறு வந்துகொண்டிருக்கும் வேளையில் உத்தர பிரதேசத்தின் அவ்ராயா என்ற பகுதியில் எதிரே வந்த லாரி தொழிலாளர்கள் சென்ற லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 26 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், பலியானவர்களின் உடலை பிளாஸ்டிக் பையில் சுருட்டி வைத்து திறந்தவெளி லாரியில் கிடத்தியதோடு அதனூடே விபத்தில் சிக்கியவர்களையும் அவ்ராயா நிர்வாகம் அனுப்பி வைத்திருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு செல்லும் வழியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை கண்ட அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், இது மனிதாபிமானமற்ற செயல் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், உத்தர பிரதேச மற்றும் பீகார் அரசைக் குறிப்பிட்டு விபத்தில் சிக்கியவர்களையும், அதில் உயிரிழந்தவர்களின் உடல்களையும் தகுந்த பாதுகாப்புடன் ஆம்புலன்சில் அனுப்பி வைக்குமாறு கேட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதன் பின்னர் உத்தர பிரதேச நெடுஞ்சாலை வழியே லாரி சென்றுகொண்டிருந்த போது இறந்தவர்கள் உடல்கள் ஆம்புலன்ஸிலும், காயமடைந்தவர்களை வெவ்வேறு ட்ரக்குகளிலும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.