உலக நாடுகளை போன்று இந்தியாவிலும் கொரோனாவின் ஆட்டுவித்தலில் மக்கள் சிக்கியிருந்தாலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல விதங்களில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், ஏதோவொரு அசம்பாவிதங்கள் ஒட்டுமொத்த நலப்பணிகளையும் தூக்கிவிசிவிடும் வகையில் அமைந்துவிடுகிறது.
அந்த வகையில் கேரளாவின் மலப்புரத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம்தான் தற்போது சமூக வலைதளவாசிகளை அதிர்ச்சியிலும், கோபத்திலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. அதுதான், கர்ப்பமாக இருந்த யானை ஒன்றுக்கு அன்னாசி பழத்தில் பட்டாசுகளை வைத்து அதனை சிதறவைத்த குரூர சம்பவம்.
கடந்த வாரம் நடந்த இந்த கொடூரம் நேற்றுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சுமார் 15 வயதுடைய கர்ப்பிணி யானைக்கு மலப்புரம் வனத்தையொட்டிய குடியிருப்புப் பகுதிக்கு அருகே வந்த போது, அதற்கு அன்னாசி பழத்தில் பட்டாசை மறைத்து வைத்து கொடுத்திருக்கிறார்கள் அடையாளம் தெரியாத நபர்கள்.
அதனை உண்ட பிறகு வாய் பகுதி கடுமையான பாதிப்பை அடைந்ததோடு, அங்கேயே வெள்ளியாறு ஆற்றில் நின்றவாறு உயிரை துறந்திருக்கிறது. இது தொடர்பாக, மோகன் கிருஷ்ணன் என்பவரின் ஃபேஸ்புக் பதிவுதான் தற்போது அனைவரது உள்ளத்தையும் ரணமாக்கியிருக்கிறது.
முதலில் இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், இரண்டு கும்கி யானைகளை அழைத்து வந்து ஆற்றில் சிக்கிய யானையை மீட்டு அறுவை சிகிச்சை செய்துவிடலாம் என்றிருந்தபோது அந்த யானை பரிதாபமாக இறந்துள்ளது. சுற்றுவட்டாரத்தில் விசாரித்தபோது, மக்கள் எவருக்கும் எந்த தொந்தரவும், அச்சுறுத்தலும் கொடுக்காமலேயே இதுநாள் வரை சுற்றித்திரிந்தது எனக் கூறியிருக்கிறார்கள்.
பின்னர், தண்ணீரில் இருந்து மீட்கப்பட்ட யானையின் உடலை புதைத்து வனத்துறையினர் இறுதி மரியாதைகள் செய்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், வனத்துறை அதிகாரி சாமுவேல் கூறியுள்ளார்.
பசிக்காக உணவு கேட்ட பழங்குடியின நபர் மதுவை அரிசி திருடியதாகச் சொல்லி அடித்தே கொன்ற நிகழ்வை போன்று தற்போது இந்த யானையும் கொல்லப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் வசைப்பாடியும், எதிர்ப்புகளை தெரிவித்தும் வருகின்றனர். இதற்கு முன்பே மனிதர்கள்-காட்டு விலங்குகளுக்கு இடையே எத்தனை எத்தனையோ தாக்குதல்கள் நடந்திருந்தாலும் தற்போது நடந்துள்ள கொடூரம் சொல்லில் அடங்காத செயல் என தெரிவிக்கப்பட்டு வருகிறது.