இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பை விட, அதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வேலையிழந்து, காசில்லாமல், உணவு கிடைக்காமல் கோடிக்கணக்கான தினக்கூலித் தொழிலாளர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையோ அதைவிட பரிதாபகரமான நிலையில் உள்ளது. இதற்கிடையே அமைப்புசாரா தொழிலாளர்களும் வேலைகளை இழந்தும், சம்பள குறைப்புக்கு ஆட்பட்டும் வருகின்றனர்.
ஆனால், மத்திய மோடி அரசோ, 20 லட்சம் கோடிக்கு திட்டங்கள் என்ற பெயரில் வேலையும் இல்லாமல், சம்பளமும் கிடைக்காமல் இருக்கும் தொழிலாளர்களுக்கு மேலும் மேலும் கடன் சுமைகளையே ஏற்படுத்தி வருகிறது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புகள் தெரிவித்ததோடு, கொரோனாவுக்கென உருவாக்கப்பட்ட பி.எம்.கேர்ஸ் நிதியை வெளியிட்டு உதவவும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் இதனை வலியுறுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “கொரோனா பெருந்தொற்று காரணமாக நாட்டு மக்கள் கற்பனைக்கு எட்டாத வகையில் பொருளாதார துயரத்தை அனுபவித்து வருகிறார்கள்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் என ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அனைவருக்கும் ஒரு முறை உதவியாக தலா 10 ஆயிரம் ரூபாயை நேரடி பணமாக மத்திய அரசு வழங்கவேண்டும். இதற்காகவாவது, பி.எம்.கேர்ஸ் நிதியை பயன்படுத்தலாம்” என மோடி அரசுக்கு யோசனை வழங்கியுள்ளார்.
முன்னதாக, உம்ஃபன் புயலால் கடுமையான பாதிப்பில் உள்ள மேற்கு வங்க மக்களுக்காக மம்தா அரசு, 6,250 கோடி ரூபயை ஒதுக்கியதோடு, அதன் மூலம் 5 லட்சம் மக்களுக்கு வீடுகளை பழுதுபார்ப்பதற்கு உள்ளிட்ட நிவாரண பணிகளை மேற்கொள்ள நிதியை விடுத்துள்ளது என மம்தா தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.