மாநிலங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் தேவையில்லை. ஆனால் மாநிலத்திற்குள் அனுமதிப்பது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் அல்லாத பகுதிகளில் படிப்படியாக தளர்வுகளைச் செயல்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளை அடையாளம் கண்டு ஊரடங்கு தளர்வுகளை மேற்கொள்வது, போக்குவரத்தை இயக்குவது போன்ற விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமே அளித்துள்ளது மத்திய அரசு.
மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்கு உள்ளே சரக்கு வாகனங்களை இயக்க தடையில்லை. சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும், அவர்களை மாநிலத்துக்குள் அனுமதிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்கிடையே பயணம் செய்வது தொடர்பான வழிமுறைகளை அந்தந்த மாநில அரசுகளே வெளியிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டங்களுக்கிடையே அவசியத் தேவை காரணமாக பயணம் செய்யவிருப்போர் தமிழக அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.