குஜராத் மாநிலத்தின் சோட்டா உதய்பூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி, குடும்பத்தினரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் 16 வயது சிறுமி ஒருவர் இரண்டு நபர்களால் குச்சியால் கொடூரமாக தாக்கப்படுகிறார். அடி தாங்காமல் கீழே விழும் சிறுமியை ஒருவர் உதைக்கிறார். இந்தக் கொடுமைகளைச் செய்வது அச்சிறுமியின் உறவினர்கள்.
இந்தக் கொடுமையை உள்ளூர்வாசிகள் தடுக்க முயலாமல் வேடிக்கை பார்க்கிறார்கள். அந்தச் சிறுமி தனது காதலனுடன் ஊரை விட்டுச் சென்றதால், ஆணவத்தில் குடும்பத்தினர் சிறுமியைத் தாக்கியதாகத் தெரியவந்துள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “இந்த வன்முறை பல இந்திய பெண்கள் எப்போதும் எதிர்கொள்வது. இதுபோன்ற வன்முறைகள் பல வடிவங்களில் செயல்படுத்தப்படுகின்றன.
பெண்களை அவமரியாதை செய்யும் அதே வேளையில் பெண்ணின் அடையாளங்களை புனிதப்படுத்தும் செயலும் நடக்கிறது. பெண் அடையாளங்களை புனிதப்படுத்தும் கலாச்சாரத்தால் இதுபோன்ற வன்முறை நிலைத்திருக்கிறது” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.