இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,67,451 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 4,797 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் முக்கிய பணியாக கொரோனா பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா பரிசோதனைகளை துரிதப்படுத்துவதே அதிலிருந்து தப்பிக்க வழி என மருத்துவ நிபுணர்களும், எதிர்க்கட்சிகளும் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட மாதிரிகளை குரங்குகள் தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீரட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக 3 பேரிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பரிசோதனை செய்வதற்கு முன்பே அதனை கொண்டு சென்ற லேப்-டெக்னீசியனை தாக்கி குரங்குகள் தூக்கிச் சென்றுள்ளன.
மாதிரிகளை தூக்கிச் சென்ற ஒரு குரங்கு, அங்கிருந்த மரத்தின் மீது அமர்ந்து மாதிரிகளைச் சாப்பிட்டுள்ளது. மேலும், சர்ஜிக்கல் கையுறையையும் குரங்கு தின்றுள்ளது. இந்தக் காட்சியை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது வைரலாகி வருகிறது.
குரங்குகளின் கைகளில் கொரோனா பரிசோதனை மாதிரிகள் சிக்கியுள்ளதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.