இந்தியா

“புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும் செலவை அரசே ஏற்க வேண்டும்” - உச்சநீதிமன்றம் உத்தரவு!

புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து ரயில் மற்றும் பேருந்துக் கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும் செலவை அரசே ஏற்க வேண்டும்” - உச்சநீதிமன்றம் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்து செல்லும் அவலம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கவுல் மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கொரோனாவை தடுக்க அரசு இரவு பகலாக உழைத்து வருகிறது என்றும் சமூக வலைதளங்களில் பலர் எதிரான கருத்துக்களையே பரப்பி வருவதாகவும் தெரிவித்தார்.

விசாரணையின்போது நீதிபதிகள், “புலம்பெயர் தொழிலாளர்கள் புறப்படுவது முதல் சொந்த ஊர்களுக்குச் சென்றடைவது வரை மாநில அரசுகள் உணவு, தங்குமிடம் வழங்க வேண்டும்.

ரயில் பயணத்தின் போது ரயில்வே துறை உணவு வழங்க வேண்டும். பேருந்துகளில் பயணித்தால் அந்தந்த மாநில அரசுகள் உணவு வழங்க வேண்டும்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான தகவல்களை அவர்கள் இருப்பிடத்தில் அவ்வப்போது தெரிவிக்கவேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அடுத்த ரயில், பேருந்து குறித்த விபரங்களை முன்பே அறிவிக்க வேண்டும்.

தொழிலாளர்களிடம் ரயில், பேருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது. ரயில் கட்டணத்தை மாநில அரசுகளே பங்கிட்டுக்கொள்ள வெண்டும். சாலைகளில் யாரேனும் நடந்து சென்றால் அவர்களை உடனடியாக அருகிலுள்ள முகாமுக்கு மாற்ற வேண்டும்.

“புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும் செலவை அரசே ஏற்க வேண்டும்” - உச்சநீதிமன்றம் உத்தரவு!

இன்னும் எத்தனை தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உள்ளார்களோ அவர்களுக்கு தேவையான ரயில்களை ரயில்வே துறை உறுதிசெய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.

மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னைகளைக் கையாள்வதில் ஏன் உறுதியான திட்டத்தை மத்திய அரசு வகுக்கவில்லை, ரயில் கட்டணம், உணவு வழங்குவதில் என்ன குழப்பம் என்பது உட்பட சரமாரி கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

மத்திய அரசும் மாநில அரசுகளும் இதுகுறித்து விரிவான பதில் மனுக்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

banner

Related Stories

Related Stories