முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரால் விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்காக கொண்டு வரப்பட்ட இலவச மின்சாரம் மற்றும் மானிய மின்சார திட்டத்தை சீரழிக்கும் வகையில் மத்திய மோடி அரசு புதிய மின்மசோதாவை கொண்டு வந்துள்ளது.
அதன் மூலம் மின்சாரத் துறையையும் தனியார் மயமாக்கி ஏழைகளில் வயிற்றில் அடிக்கும் வகையில் பாஜக அரசின் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகமும், இன்னபிற எதிர்க்கட்சித் தலைவர்களும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.
முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமியோ பெயருக்கு கடிதம் மட்டும் பிரதமருக்கு எழுதியுள்ளதற்கும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து மீண்டும் இலவச மின்சார விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “இந்திய உணவுக் களஞ்சியத்தை
வழிய வழிய
நிரப்பிக் கொடுத்தவர்கள் உழவர்கள்.
அதனால்தான் இன்று இந்தியாவின் வயிறு
இறந்துவிடாமல் இருக்கிறது.
இலவச மின்சாரத்தைத் துண்டித்தால்
கொரோனாவின் எதிர்கால அலைகளை
எதிர்கொள்ள முடியாது.
சிறப்போடு ஆள நினைப்பவர்கள்
பொறுப்போடு சிந்திக்க வேண்டும்.”
முன்னதாக, “உரிமை மின்சாரத்தை நீக்கி
உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம்.
உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்...
அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும்.” என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.