கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டதால், புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.
தொடர்ந்து தற்போது நான்காவது கட்டமாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உண்ண உணவின்றி, சாலைகளில் நூற்றுக்கணக்கான மைல் தொலைவுக்கு நடைபயணமாகவே சென்றனர்.
பலர் செல்லும் வழியில் உடல்நலக்குறைவாலும், விபத்துகளில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் தொடர்ச்சியாக நடந்தன. இதையடுத்து, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசுகள் உதவ வேண்டும் எனக் கோரிக்கை வலுத்தது.
ஆனால், தங்குமிடம், உணவு கிடைக்காமல் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இதையடுத்து, கடந்த 1-ம் தேதி முதல் புலம்பெயர் தொழிலாளர்கள் செல்வதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கும் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் கொடுமையும் நடக்கிறது.
இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னும் சொந்த ஊர் செல்ல முடியாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கி அவதியுறும் காட்சிகளை உணர்ந்த உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று வழக்காகப் பதிவு செய்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல், எம்.ஆர் ஷா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கி சொந்த மாநிலம் செல்ல முடியாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடங்களை இலவசமாக மத்திய அரசும், மாநில அரசுளும் வழங்கிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக, அவர்களது பிரச்னைகளைத் தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்பது குறித்து மத்திய அரசும், மாநில அரசுகள் தங்கள் பதிலை வரும் 28-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்துக்கு உதவுவார் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.