இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சரியாக 2 மாதங்களைக் கடந்துள்ளது. நான்கு கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதும், இதுவரையில் கொரோனாவின் பாதிப்பு குறைந்தபாடில்லை. 1.50 லட்சத்தை நெருங்கும் வகையிலேயே பாதிப்பு உள்ளது.
மேலும், 60 நாட்களாகியும் இன்றளவும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சாலை மார்க்கமாக நடந்துசெல்லும் நிகழ்வுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, காணொளிக் காட்சி மூலம் பேட்டி அளித்துள்ளார்.
அதில், “21 நாட்களில் கொரோனா முடிவுக்கு வரும் என்று பிரதமர் மோடி தொலைக்காட்சியில் அறிவித்தார். ஆனால் இன்று 60 நாட்கள் தாண்டிய நிலையிலும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவேதான் ஊரடங்கு மிகப்பெரிய தோல்வி என்கிறோம். பல மாநிலங்களில் கொரோனா பரவல் பல மடங்கு அதிகரித்துக் கொண்டு வருக்கிறது.
ஜி.டி.பியில் 10% கொரோனா நிதி என்று பிரதமர் அறிவித்தார். ஆனால், உண்மையில் 1% கூட இல்லை. அதுவும் கடன் வழங்கும் திட்டம்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு எந்த பண உதவியும் வழங்கப்படவில்லை.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் விசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பண உதவி வழங்கியுள்ளது. ஆனால் மாநிலங்களுக்கு எந்த நிதி உதவியும் மத்திய அரசு வழங்கவில்லை. பல மாநில அரசுகள் நிதி இல்லாமல் தத்தளித்து வருகின்றன.
நாட்டின் உயிர்நாடியான ஏழை தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் குடும்பத்திற்கு குறைந்தது 5,000 ரூபாயை பணமாக வழங்கவேண்டும். சிறு, குறு, நடுதர தொழில்களுக்கு நேரடி பண உதவி வழங்கவேண்டும். அப்போதுதான் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். இந்த நிலையில் பிரதமர் மோடி அடுத்து என்ன செய்யப்போகிறார்?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.