தெலங்கானா மாநிலத்தில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரீய சமீதி கட்சியின் நாராயங்கேட் தொகுதி எம்.எல்.ஏ பூபால் ரெட்டியின் 'பிறந்தநாள் கொண்டாட்டத்தில்' ஏராளமான ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். இதன்மூலம் அவர் ஊரடங்கு உத்தரவை மீறிவிட்டார் என்று கூறி தனியார் சேனல் ஒன்று செய்தி ஒளிபரப்பியது.இந்தச் செய்தியை பத்திரிகையாளர் பரமேஷ் என்பவர் தான் பணிபுரிந்த செய்தி நிறுவனத்திற்கு அளித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து சமூக ஆர்வலர் ஒருவர் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஊரடங்கை மீறியதற்காக எம்.எல்.ஏ., பூபால் ரெட்டி மீது நடவடிகை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதனைத்தொடர்ந்து மே 21 அன்று உயர் நீதிமன்றம் இதுகுறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு எம்.எல்.ஏ., பூபால் ரெட்டிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதற்கு அடுத்த நாள், பத்திரிகையாளர் பரமேஷின் வீடு நாராயங்கேட் நகராட்சி ஆணையத்தால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
எம்.எல்.ஏ-வின் தூண்டுதலின்பேரில் தனது வீடு இடிக்கப்பட்டதாக பத்திரிகையாளர் பரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நகராட்சி ஆணையர் சீனிவாஸ் என்னிடம் சட்டமன்ற உறுப்பினர் வீட்டை இடிக்க அழுத்தம் கொடுக்கிறார் என்று கூறினார். என் வீடு இடிக்கப்பட்டதால் எனக்கு ரூ.10 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீட்டைக் கட்டிக்கொண்டிருந்தோம். அதை இடித்துள்ளனர். எம்.எல்.ஏ., பூபால் ரெட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து செய்தி வெளியிட்ட சிறிது நேரத்திலேயே என்னை அழைத்து, ஏன் செய்தி கொடுத்தாய் என்று கேட்டார். தவறான செய்தி எதுவும் அளிக்கவில்லை என்று நான் அவரிடம் சொன்னேன், மேலும், நான் அங்கு பார்த்ததைத் தான் செய்தியாக வெளியிட்டேன்" என்று கூறினார்.
இருப்பினும், நகராட்சி ஆணையர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார், கட்டிடத்தை நிர்மாணிக்க தேவையான அனுமதி இல்லை. அனுமதி இல்லாமல் வீடு கட்டியிருந்ததால் நாங்கள் வீட்டை இடித்தோம் என்று கூறியுள்ளார். மேலும், ஊரடங்கின் போதுகூட அவர் வீடு கட்ட அனுமதி கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்திருக்க வேண்டும். அப்படிக் கேட்டிருந்தால் நாங்கள் அனுமதி வழங்கியிருப்போம் என்று கூறியுள்ளார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பத்திரிகையாளருக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள் களம் இறங்கியுள்ளனர். சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கும் நடைமுறை நாராயங்கேட் நகராட்சி ஆணையத்தால் பின்பற்றப்படவில்லை, நகராட்சி ஆணையர் சீனிவாஸ் விவரித்த ‘சட்டவிரோதத்திற்கு’ பொருந்தக்கூடிய பிற கட்டிடங்கள் இடிக்கப்பட்டனவா என்பது கேள்வி எழுப்பியுள்ளனர்.
தன் மீதான குற்றச்சாட்டுகளை எம்.எல்.ஏ., பூபால் ரெட்டி மறுத்துள்ளார். “நான் இதைப் பற்றி எந்த வகையிலும் கவலைப்படவில்லை. நான் வேறு வேலையில் இருந்தேன், இடிப்பு நடந்தபோது கல்யாண லட்சுமி திட்டத்திற்கான காசோலைகளை விநியோகித்தேன். நான் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை. சம்பந்தப்பட்ட செய்தி சேனல் தெலங்கானாவில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக என்னை இழிவுபடுத்த விரும்புகிறது” என்று கூறினார்.
ஊரடங்கில் பத்திரிகையாளர் வீடு இடிக்கப்பட்ட விவகாரம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.