ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை நன்றாக கவனித்து கொள்வது மாநிலங்களின் பொறுப்பு என நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் கந்த் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் நடைபயணமாக சொந்த ஊர் புறப்பட்டனர். அவர்களில் பலர் வழியிலேயே மரணமடைந்தனர்.
இதுகுறித்து நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கந்த், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : “ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களுக்குச் சென்று பிழைக்கும் தொழிலாளர்களின் நிலை கொடுமையாக மாறியுள்ளது. இவர்கள் விஷயத்தில் நாம் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னை பெரிய சவால் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் உருவாக்கிய சட்டங்களினால் பொருளாதாரத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பெரிய அளவில் உருவாகினர். தொழிலாளர்களை நன்றாகக் கவனித்துக் கொள்வது மாநிலங்களின் பொறுப்பு.
இந்த சவாலில் நாம் இன்னும் கொஞ்சம் நன்றாகச் செயல்பட்டிருக்கலாம். ஒவ்வொரு தொழிலாளரையும் நன்றாக வைத்திருப்பதில் மாநில, மாவட்ட மட்டத்தில் நாம் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.