இந்தியாவில் ஊரை விட்டு சாலைகளில் நடந்து செல்பவர்கள் தொழிலாளர்கள் எல்லாம், இந்தியர்களே அல்ல. அவர்கள் வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்கள். குடியுரிமை மறுக்கப்பட்ட காரணத்தாலேயே கால்நடையாக நடந்து சொந்த நாட்டுக்குச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள் என சமூக வலைதளங்களில் வதந்திகளும், பொய்ச் செய்திகளும் பரவி வருகின்றன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கடந்த மார்ச் 24 நள்ளிரவு முதல் இதுகாறும் நடைமுறையில் உள்ளது. அன்றில் இருந்து நாட்டில் அனைத்து விதமான பொது போக்குவரத்துகளும் முடக்கப்பட்டன.
அதன் காரணமாக வேலையும் இல்லாமல், உணவும் கிடைக்காததால் சொந்த ஊருக்கே சென்றுவிடலாம் என முடிவெடுத்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு நடக்கத் தொடங்கி இன்றும் அது நின்றபாடில்லை.
மத்திய அரசோ, ஒன்றரை மாதம் கடந்து மே 1ம் தேதியில் இருந்துதான் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு ரயில்களை இயக்கத் தொடங்கியது. ஆனால், அது தொடர்பான எந்த தகவல்களும் தொழிலாளர்களின் செவிகளுக்கு ஒழுங்காக செல்லாத காரணத்தால் தங்களது படையெடுப்பை தொடர்ந்தே வருகிறார்கள்.
இந்நிலையில், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதள அறிவாளிகளும் இந்தியாவின் சாலைகளில் நடப்பவர்கள் எல்லாம் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் நாட்டை விட்டு புறப்படுகிறார்கள் என எள்ளளவும் குற்றவுணர்ச்சியே இல்லாமல் வதந்திகளையும், பொய்ச் செய்திகளையும் பரப்பி வருகின்றார்கள்.
இது தொடர்பாக உண்மையை கண்டறிந்த பி.ஐ.பி நிர்வாகம், சமூகவலைதளங்களில் உலாவரும் வங்கதேச தொழிலாளர்கள் குறித்த செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை. அதில், ரயில் பெட்டிகளுக்கு இடையே குழந்தையை வைத்துக்கொண்டு பெண் ஒருவர் ஓடும் ரயிலும் பயணிக்கும் காணொளி 2016ம் ஆண்டு வங்கதேசத்தில் பதிவு செய்யப்பட்டது.
அதேபோல, ரயில் பெட்டிகளுக்கு மேலும், ரயில் எஞ்சின் மீதும் மக்கள் பயணிப்பது போன்ற காணொளியும் 2018ம் ஆண்டு வங்கதேசத்தில் பதிவு செய்யப்பட்ட ஒன்றே என பி.ஐ.பி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
அந்த இரண்டு வீடியோக்களில் உள்ள மக்கள் இந்தியாவில் எடுக்கப்பட்டது என்றும், அவர்கள் வங்கதேசக் குடியேறிகள் என்றும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.