ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி பாலிமர் நிறுவன தொழிற்சாலையில் இருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டு 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாகப்பட்டினத்தில் இந்துஸ்தான் பெட்ரோலிய தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் தொழிற்சாலைப் பகுதியில் இந்துஸ்தான் பெட்ரோலிய தொழிற்சாலை (எச்.பி.சி.எல்)நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த பெட்ரோலிய தொழிற்சாலையில் கச்சா எண்ணெய்யில் இருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் சுத்திகரிப்பு செய்து உற்பத்தி செய்யப்படு வருகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு உற்பத்தி பணிகள் குறைந்த அளவில் செயல்பட்டுவந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகளில் தொழிற்சாலை இயங்க அனுமதி கிடைத்ததையடுத்து மீண்டும் உற்பத்தி பணி தொடங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் தொழிற்சாலையில் இருந்து கரும்புகைகள் வெறியேறியது. வழக்கத்தைவிட அதிக புகைவெளியேறியதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அலறி அடித்து கொண்டு வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இதுதொடர்பாக எச்.பி.சி.எல்)நிறுவனம் கூறுகையில், வழக்கமாக வெளியேறும் புகைதான் என்றும் 50 நாட்களுக்கும் மேலாக பணி செய்யாமல் இருந்த நிலையில் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்பட்டதால் புகை நிறம் மாறியதாகவும் கூறியுள்ளனர்.