தனியாருக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் வகையில் 2003ம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ள மத்திய மோடி அரசு, அதற்கான வரைவு அறிக்கையை கடந்த ஏப்ரல் 17 அன்று வெளியிட்டது.
விவசாயிகள் மற்றும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் வகையிலான பா.ஜ.க அரசின் இந்த மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளன.
முத்தமிழறிஞர் கலைஞரால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட இலவச மின்சார திட்டத்தை ஒழித்துக் கட்டும் வகையில் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
மாநிலங்களை ஓரங்கட்டி, அதிகாரங்களை மையப்படுத்திக் கொள்வதன் அடுத்தகட்டமான இந்தச் சட்டத் திருத்தத்தை, மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், கவிப்பேரரசு வைரமுத்து மத்திய அரசு இந்த இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்யும் முடிவை கைவிடும்படி வலியுறுத்தி ட்விட்டரில் அவரது பாணியிலேயே பதிவிட்டுள்ளார்.
அதில், “உரிமை மின்சாரத்தை நீக்கி
உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம்.
உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்...
அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும்.”
எனப் பதிவிட்டுள்ளார்.