உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜனவரி 30 ஆம் தேதி முதல் கொரோனா தொற்று கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் முதலில் கண்டறியப்பட்டது. ஊகானிலிருந்து திரும்பிய மாணவிக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மூலமாக பல மாநிலங்களிலும் படிப்படியாக கொரோனா பரவியது.
மார்ச் 16 ஆம் தேதி நூறு பேருக்கும், மார்ச் 30 ஆம் தேதி ஆயிரம் பேருக்குமாக உயர்ந்தது. தற்போத மூன்றரை மாதங்களில் பாதிப்பு ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சுமார் 40 ஆயிரம் பேர் (48%) குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு மிக குறைவாக 3,163 என்கிற எண்ணிக்கையில் இருப்பது சற்றே ஆறுதலாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளர்.
இதுவரை 24 லட்சம் பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனை அதிகரிக்க வேண்டும் என்றும் அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு கோடி பேருக்கு சோதனைகள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஐ.சி.எம்.ஆர் இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் பாதிப்பு பத்தாயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் ஐந்தாயிரம் பேருக்கும், மற்ற மாநிலங்களில் அதனை விட குறைவான பாதிப்புதான் பதிவாகியுள்ளது.
நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரிப்பது மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தோல்வியைக் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் அரசின் நிவாரணமும் மக்களுக்கு சென்றடையாத நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டிருப்பது நாட்டு மக்களை கவலையடைய செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமின்றி 50 நாட்களுக்கு மேல் ஊரடங்கை நீடித்துள்ள அரசு மக்களை தனிமைப்படுத்தி மேலும் பாதிப்புகள் ஏற்படாதவாறு தடுப்பதற்கு பதில்,, இந்த கொரோனா ஊரடங்கு சூழலை சாதகமாக பயன்படுத்தி பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அதன் பங்குகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டிருப்பது மிகுந்த வேதனை ஏற்படுத்துகிறது.