கொரோனா பாதிப்புக் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் போக்குவரத்து வசதி முடங்கி உள்ளதால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு கால் நடையாகவும், கிடைத்த லாரி மற்றும் சைக்கிளிலும் பயணம் செல்கின்றனர். இந்த பயணத்தின் போது பல்வேறு விபத்துக்களில் சிக்கி 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் காளையுடன் சேர்ந்து வண்டியை இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே உள்ள பட்டர்முண்ட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல்.
ஊரடங்கால் டெல்லி மோவ் நகரத்திலிருந்து, தங்கள் ஊருக்குச் செல்ல முடிவு எடுத்தனர். ஆனால் பொதுப் போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ள நிலையில் தங்களது மாட்டு வண்டியில் செல்ல முடிவு எடுத்து புறப்பட்டுள்ளனர்.
புறப்பட்ட சில கிலோ மீட்டரிலேயே சாப்பாட்டிற்கு வழியில்லாததால் இரண்டு காளைகளில் ஒரு காளையை விற்றுள்ளனர். அதுவும் . 15 ஆயிரம் ரூபாய்மதிப்புள்ள காளையை, குடும்பத்திற்கு பொருட்கள் வாங்க 5,000 ரூபாய்க்கு விற்றுள்ளனர்.
இந்நிலையில், ஒரு காளையை விற்றுவிட்டதால் மாட்டு வண்டியை ஒரு பக்கம் மாடும், மறுபக்கம் ராகுலும் சேர்ந்து இழுத்துச் சென்றுள்ளனர். அவர் சோர்வடையும் நேரம், அவரது மைத்துனர் வண்டியை இழுத்துச் செல்வதாக கூறப்படுகிறது.
காளையுடன் சேர்ந்து ஒரு மனிதரும் வண்டியை இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அந்த வண்டியில், சில பொருட்களுடன், பெண்கள் உள்ளிட்ட சிலர் அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.