நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், கர்நாடகாவில் பா.ஜ.க எம்.எல்.ஏவின் மகன், சாலையில் குதிரைப்பயணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் குண்டலுபேட்டை தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ-வான நிரஞ்சன் குமார் என்பவரின் மகன் புவன் குமார் தேசிய நெடுஞ்சாலையில் முகக்கவசம் இல்லாமல் குதிரையில் வலம் வந்தது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி குதிரையில் சுற்றித் திரியும் பா.ஜ.க எம்.எல்.ஏ மகன் மீது எந்த ஒரு வழக்கும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கர்நாடகாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000-த்தை நெருங்கி வரும் நிலையில் விதிமுறைகளை மீறி அவர் குதிரையில் வேகமாக வலம் வந்தது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இக்காட்சியை சிலர் வீடியோ எடுத்து பதிவிட, அது சமூக வலைதளங்களில் வைரலானது. பா.ஜ.க எம்.எல்.ஏ. மகன் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்யவேண்டும் எனப் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.