கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வேலையில்லாமல், உணவில்லாமல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் முடங்கிப் போயுள்ளனர். மூன்றாம் கட்ட ஊரடங்கும் தொடங்கியாயிற்று. இப்போது வரை பொது போக்குவரத்து சேவையும் இல்லாததால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கால்நடையாகவே சொந்த ஊருக்கு படையெடுத்து வருவதைக் காண முடிகிறது.
இந்த நிலையில், சுமார் 40 நாட்களுக்குப் பிறகு பல்வேறு விமர்சனங்கள், எதிர்ப்புகளுக்குப் பிறகு தூங்கியெழுந்த மோடி அரசு, மே 7ம் தேதி முதல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றும், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.
இருப்பினும், அதிலும் சூழ்ச்சியைக் கையாண்டது மோடி அரசு. என்னவெனில், ஊரடங்கு தொடங்கிய நாள் முதலே காசில்லாமல், உணவுக்கே திண்டாடி வந்த தொழிலாளர்களிடம் சொந்த ஊருக்கு செல்ல பயணக் கட்டணம் வசூலிக்க எத்தனித்தது. ஆனால், இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தொழிலாளர்களின் பயணச் செலவை தத்தம் மாநில காங்கிரஸ் கமிட்டியே ஏற்கும் என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, 85 சதவிகித பயணச் செலவை மத்திய அரசு, 15% செலவை மாநில அரசும் ஏற்கும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது. வழக்கம்போல், மோடி அரசாங்கம் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்ற பாணியை இந்தச் சமயத்திலும் செய்துள்ளது. அதாவது, தொழிலாளர்களுக்கான பயணச்செலவின் 85% ஏற்பதாக கூறிய மத்திய அரசு அதைச் செய்யவில்லை என பஞ்சாப் மாநில சிறப்பு வருவாய்த் துறை தலைமை ஆணையர் கே.பி.எஸ்.சித்து பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தொழிலாளர்களின் 85% பயணச் செலவை ரயில்வே அமைச்சகம்தான் ஏற்கிறது என யாரேனும் கூறினால், அது அமெரிக்காவில் கொடுப்பார்கள் என்றே நான் கூறுவேன். இல்லையேல், ரயில்வே அமைச்சகம் கட்டணத்தை செலுத்தியதற்கான ஆதாரப்பூர்வ ரசீது இருந்தால் வெளியிடுங்கள்.” என காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.
ஏனெனில், பா.ஜ.க அரசு இதுவரையில் அப்படியொரு செயலில் ஈடுபடவில்லை என்பதே கே.பி.எஸ்.சித்துவின் விமர்சனமாக உள்ளது. பஞ்சாப் மாநில அரசு, பேரிடர் நிதியில் இருந்து ரூ.30 கோடியை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பயண செலவுக்காக ஒதுக்கீடு செய்துள்ளது என்பதே நிதர்சனம். ஆகவே, 100 சதவிகித பயணச் செலவையும் பஞ்சாப் மாநில அரசே ஏற்று வருகிறது.
இதுவரையில், பஞ்சாப்பில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களில் 6.44 லட்சம் பேர் சொந்த ஊருக்குச் செல்வதற்காக விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.