உலகமே கடந்த 4 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் என்னும் கண்ணுக்கே புலப்படாத எதிரியுடன் போராடிக் கொண்டு வருகிறது. அதில் இந்தியாவுக்கும் விதிவிலக்கல்ல. இந்த வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், வரலாற்றில் இதுவரை பதிவிடப்படாத அளவுக்கு பொருளாதார நிலை அதளபாதாளத்துக்குச் சென்றிருக்கிறது.
இதன் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை சமீபத்தில் ஜீரோ டாலருக்கு கீழ் சென்றது. உலக பொருளாதார வரலாற்றில் இதுவே முதல் முறையாகவும் பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இருக்கையில் இந்தியாவில் மோடி அரசு, கச்சா எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டபோதும், தன்னுடைய வரி விதிப்பு செயல்களை கைவிடாமல் இருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் கிடைக்கும் பலன்களான பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல், அதன் மீதான கலால் வரியை 13, 10 ரூபாய் வீதம் உயர்த்தி ரூ.1.40 லட்சம் கோடிக்கு வருவாய் ஈட்டுகிறது மோடி அரசு. கலால் வரியை உயர்த்தினால் சில்லறை விற்பனையில் விலை உயராது. ஆனால், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி மூலம் சில்லறை விற்பனையில் விலை குறைய அதிக வாய்ப்பு உள்ளது. அதனை தொடர்ந்து மோடி அரசு தடுத்து வருகிறது.
இந்த நிலையில், மக்களுக்கான பலன்களை கிடைக்கவிடாமல், தன்னுடைய கஜானாவை மட்டும் நிரப்பி வரும் மோடி அரசை கண்டித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ட்விட்டரில் விமர்சித்துள்ளார். அதில், “நாடு முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் அதி தீவிரத்தை எட்டும் நிலையில், பொருளாதார நிலையோ கேள்விக்குறியாகி வருகிறது.
இந்த இக்கட்டான சூழலில் பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்காமல், அதன் மீதான கலால் வரியை மத்திய மோடி அரசு உயர்த்தியிருப்பது எள்ளளவும் நியாமில்லாதது. இதனை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, காங்கிரஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில், “நாட்டில் ஊரடங்கால் மக்கள் வேலையில்லாமல், உணவில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்திலும் மக்களிடம் இருந்தே 1.40 லட்சம் கோடி ரூபாயை மோடி அரசு வாங்க நினைப்பது அப்பட்டமான தேசவிரோதச் செயல். கொடூரமான மனிதநேயமற்ற செயலும் கூட” எனத் தெரிவித்துள்ளார்.