புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்லும் சிறப்பு ரயில் கட்டணத்தை PM Cares நிதியிலிருந்து செலுத்தலாமே என்று பா.ஜ.க மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி பா.ஜ.க அரசை விமர்சித்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல ரயிலில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்தக் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களின் போக்குவரத்துக் கட்டணத்தை காங்கிரஸ் கட்சி செலுத்தும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார்.
பிரதமரின் கொரோனா நிதிக்கு ரூ.151 கோடி கொடுக்க முடியும் உங்களால் ஏழை புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து டிக்கெட் வசூலிக்காமல் இருக்க முடியாதா என ரயில்வே துறையைச் சாடியிருந்தார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
இந்நிலையில், பா.ஜ.கவின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி, இந்த நேரத்தில் கட்டணம் வசூலிக்கும் ரயில்வே துறையின் செயலையும், மத்திய அரசையும் விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள சுப்பிரமணியன் சுவாமி “அரை வயிற்றுப் பட்டினியோடு கிடக்கும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து ரயில் கட்டணத்தை மத்திய அரசு வசூலிப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் இலவசமாக மத்திய அரசு அழைத்து வருகிறது. ரயில்வே துறை கட்டணத்தை ஏற்க மறுக்கிறது. டிக்கெட் கட்டணத்தை பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ஏன் செலுத்தக்கூடாது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.