கொரோனா அறிகுறி குறித்தும், அதன் பரவல் குறித்தும் அறிய ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
நோய் தாக்குதலுக்கு ஆளான நபரின் அருகில் சென்றால் நம்மை எச்சரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி, 5 கோடிக்கும் அதிகமானோரால் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆரோக்கிய சேது செயலியில் தனிநபர் விவரங்கள் பாதுகாப்பாக இல்லை என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், “ஆரோக்கிய சேது செயலி ஒரு அதிநவீன கண்காணிப்பு அமைப்பாகவும், எந்தவொரு மேற்பார்வையும் இன்றி தனியார் ஆபரேட்டருக்கு தரவுகளை வழங்குவதாகவும் உள்ளது. இதனை தனியார் அமைப்பு தயாரித்துள்ளது.
அந்நிறுவனத்துக்கு பெரிய சிந்தனைகள் இருந்ததாக தெரியவில்லை. இதனால் அந்த செயலியை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பு மற்றும் தனி நபர் விவரங்கள் பறிபோகும் கவலை ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பங்கள் நம்மை பாதுகாக்கும்; ஆனால், குடிமக்களின் அனுமதியின்றி அவர்களை கண்காணிக்க பயன்படுத்தப்படக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.