கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் உலகின் பல்வேறு நாடுகளில் வேலை இழப்புகள் வைரஸ் பாதிப்பை விட அதிகமாக நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வேலையிழப்பால் வாடும் மக்கள், உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கும் எண்ணிக்கையோ லட்சக்கணக்கில் உள்ளது. அதுபோல, இந்தியாவிலும் இரண்டு கட்ட ஊரடங்கு முடிவடைந்து மூன்றாவது கட்ட ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, முதற்கட்ட ஊரடங்கின் போது சில தனியார் நிறுவனங்கள் பணியாளர்களின் சம்பளத்தில் கைவைத்தது நிகழ்ந்தது. அடுத்தக்கட்டத்தில் வேலையிழப்பு வேலைகளிலும் சில நிறுவனங்கள் இறங்கின. அதிலும், பெரிதும் வருவாயை ஈட்டக்கூடிய நிறுவனங்களே பணியாளர்களை வேலையை விட்டு நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நாட்டிலேயே பெரும் கோடீஸ்வர வழிபாட்டு தலங்களிலேயே முதலிடத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 1,300 பேரை அதன் நிர்வாகம் பணிக்கு வர வேண்டும் எனக் கூறியிருப்பது, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் பெரும் இடியை இறக்கியுள்ளது.
ஏப்ரல் 30ம் தேதியோடு, தொழிலாளர்களை நிர்வகிக்கும் TTD உடனான ஒப்பந்த நிறைவுற்றதால், இந்த பணிநீக்கம் நடவடிக்கையை திருப்பதி நிர்வாகம் கையாண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், வேறு வழியின்றின் போராட்ட ஆயுதத்தை தொழிலாளர்கள் கையில் எடுத்ததால், அதிர்ந்து போன தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி, இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்
முன்னதாக, ஊரடங்கை காரணம் காட்டி, எந்த நிறுவனமும் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதோ, சம்பளத்தை குறைப்பதோ கூடாது என வாய் வார்த்தையாக மட்டுமே பிரதமர் மோடி கூறியிருப்பதாலோ என்னவோ அதனை எவரும் பின்பற்றுவதில்லை என்பது திருப்பதி தேவஸ்தானத்தின் நிலைப்பாட்டின் மூலம் புரியவரும்.