வங்கிகளில் பல கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டுக்குத் தப்பியோடிய விஜய் மல்லையா, மெகுல் சோக்ஷி, நீரவ் மோடி உட்பட 50 பேரின் 68,000 கோடி ரூபாய் கடனை வங்கிகள் தள்ளுபடி செய்த அதிர்ச்சி தகவல் ஆர்.டி.ஐ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக நிறுவனங்கள் தொழில்துறைகள் என முடங்கி நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. இதனால் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறி வரி வருவாயை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
தொழில்துறையினருக்கு கடன் வழங்க ரிசர்வ் வங்கி நிதி வழங்கும் அளவுக்கு வங்கிகளின் நிலை படு மோசமாக உள்ளது. இத்தனைக்கும் நடுவில் மோசடி செய்தவர்களின் 68,607 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்தாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் அதன்பிறகு பா.ஜ.க ஆதரவாளர்கள் கடன் தள்ளுபடி செய்யவில்லை; வராக் கடன் பட்டியலில் சேர்த்ததாக பல்வேறு சடுகுடு விளக்கங்களை கூறிவருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் முத்ததலைவர் பா.சிதம்பரம் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா நபர்களுடைய வராக் கடன் தொகைகளை ‘வராக் கடன்’ என்று பேரேட்டில் எழுதி அந்தக் கடன்களை வசூலிக்கவேண்டும் எனக் கேட்டுகொண்டுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பா.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், “ரூ.68,000 கோடி வராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா? நிறுத்தி வைத்துள்ளார்களா? என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம். இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா!
இந்த மாபெரும் தவறைத் திருத்துவதற்கு ஒரே வழிதான் உண்டு. ரிசர்வ் வங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடவேண்டும். மீண்டும் இந்த மூன்று நபர்களுடைய வராக் கடன் தொகைகளை ‘வராக் கடன்’ என்று பேரேட்டில் எழுதி அந்தக் கடன்களை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கி விடுக என்று உத்தரவிடவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.