“முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியில் பேசியதால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை” என மிசோரம் முதல்வர் சொரம்தங்கா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் காணொளிக் காட்சி மூலம் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தக் காணொளிக் காட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, 9 முதல்வர்கள் மட்டுமே பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது பல முதல்வர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுஒருபுறமிருக்க, இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மிசோரம் முதல்வர் சொரம்தங்கா குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய மிசோரம் முதல்வர் சொரம்தங்கா, “எனக்கு இந்தி தெரியாது. அவர்கள் இந்தியில் பேசியதால், அவர்கள் பேசிய ஒரு வார்த்தை கூட எனக்குப் புரியவில்லை.” எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி பொதுவாக மக்களிடையே உரையாடும் போதும், கூட்டங்களின் போதும், செய்தியாளர் சந்திப்புகளிலும் இந்தியில் பேசுவது வழக்கம். பிரதமரின் இத்தகைய போக்கு தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாநில முதல்வரே வெளிப்படையாக இதுகுறித்து கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடே இக்கட்டான நிலையில் உள்ளபோது மக்களிடையேயும், முக்கிய தலைவர்களிடையேயும் பேசும்போது அனைவருக்கும் சென்றடையும் வகையில் பிரதமர் பேச வேண்டும் அல்லது மொழிபெயர்ப்பாளரையாவது நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.