இந்தியாவில் பரவி வரும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் தமிழகமும் ஒன்று.
இந்நிலையில், கொரோனா நோய் பரவலை தடுக்கும் முயற்சியில் பெரும் எண்ணிக்கையிலான பாதிப்புகளை துரிதமாகக் கண்டறிய உதவும் ரேபிட் டெஸ்ட் கிட்களை மத்திய அரசு சீனாவிடம் ஆர்டர் செய்தது. இந்த கிட் ஒன்றின் விலை ரூ.600. தமிழகத்திற்கும் 34 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவியை மத்திய அரசு அனுப்பி வைத்தது.
அது பல்வேறு தாமதத்திற்கு பிறகு தற்போது தமிழகத்திற்கு வந்து சோதனைப் பணியும் நடந்துவருகிறது. தமிழகத்தை போல் ரேபிட் கிட்களை மற்ற மாநிலங்களும் வாங்கி சோதனை செய்தது வந்தது. இந்த சோதனையை மேற்கொண்ட ராஜஸ்தான் மாநில அரசு பெரும்பாலும் தவறான தகவல்களே வெளியாகிறது என்ற குற்றச்சாட்டை அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களும் அதேக்குற்றச்சாட்டை அறிவித்தது. இதேபோன்று பல்வேறு குற்றச்சாட்டு எழுந்ததால் மத்திய அரசு நேற்றைய தினம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவில், அடுத்த இரண்டு நாட்களுக்கு நாடு முழுவதும் ரேபிட் கிட் மூலம் பரிசோதனை செய்ய வேண்டாம். தொண்டையில் சளியை எடுத்து பரிசோதனை செய்யும் பி.பி.ஆர் டெஸ்ட் மட்டுமே நடத்த வேண்டும் என கூறியிருந்தது.
இதனையடுத்து நாடுமுழுவதும் ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை நேற்று முதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கொரொனா சோதனையை உறுதிபடுத்த ரேபிட் கிட் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என மற்றொரு அறிவிப்பை இன்றைய தினம் ஐ.சி.எம்.ஆர் தலைமைச் செயலாளர்களுக்கு ஆலோசனை கடிதத்தில் தெரிவித்துள்ளது.
அந்த அறிவிப்பி, “கொரொனா சோதனையை உறுதிபடுத்த ரேபிட் கிட் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம். நோய் பரவல் கண்காணிப்புக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். கொரோனா தொற்றினை உறுதி செய்ய பி.சி.ஆர் சோதனையை மட்டும் மேற்கொள்ள வேண்டும். அதனால் நாடுமுழுவதும் பி.சி.ஆர் சோதனைகளை அதிகரிக்க வேண்டும்”என்று மாநில அரசுகளுக்கு ஐ.சி.எம்.ஆர். ஆலோசனை வழங்கியுள்ளது.