இந்தியாவில் முதன்முதலில் கொரோனா பாதிப்பை பெற்ற மாநிலம் கேரளா. ஆனால், முதல் பாதிப்பு தங்கள் மாநிலக் கதவை தட்டியபோதே அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் கையில் எடுத்தது அம்மாநில அரசு. பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து குணமடைய வைத்தது.
அதன் பிறகு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததும் சிறிதும் சோர்ந்துவிடாமல், போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, வைரஸ் பரவலை துரிதமாகக் கட்டுப்படுத்தியது கேரள அரசு.
மேலும் ஊரடங்கின்போது மக்கள் எவ்வித சுணக்கத்தையும் சந்தித்துவிடக் கூடாது என்பதற்காக துளியளவும் பாகுபாடு பார்க்காமல் அனைவருக்குமான உதவிகளைச் செய்து வந்தது. அதன் பலனாக தற்போது இந்தியாவிலேயே மிக விரைவில் கொரோனாவை கட்டுப்படுத்திய மாநிலமாக கேரளா விளங்குகிறது.
மற்ற மாநில மக்களுக்கு கேரள அரசின் மீதும் அதன் செயல்பாடுகள் மீதும் பெரிதும் நம்பிக்கையும், மதிப்பும் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கையின் மூலம் அந்த மாநிலத்தின் மீதான ஈர்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சமூக வலைதளங்களில் பலர் கேரளாவுக்கே சென்றுவிடலாம் என்று பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் வட்காம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி, இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “கேரளாவுக்கு சென்றுவிடலாம் என்று கூறுவதற்கு பதில், கேரள மாநிலத்தைப் போன்று நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களில் கேரளாவின் அரசியல் மற்றும் மக்கள் நல்வாழ்வு கொள்கைகளை பின்பற்ற தொடங்குவோம்” என ஜிக்னேஷ் பதிவிட்டுள்ளார்.