மத்திய பா.ஜ.க அரசு ரூபாய் 20 லட்சம் கோடியை கொரோனா தடுப்புக்காக உடனடியாக ஒதுக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கே.எஸ்.அழகிரி இன்று (ஏப்ரல் 14) வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 21 நாட்களாக இருந்த மக்கள் ஊரடங்கு வருகிற மே 3 ஆம் தேதி வரை நீடிக்கும் என பிரதமர் மோடி தமது உரையில் அறிவித்திருக்கிறார். இதுவரை கொரோனா தொற்று நோய்ப் பரவல் மற்றும் மக்கள் ஊரடங்கு குறித்து நான்கு முறை உரையாற்றியிருக்கிறார்.
இந்த உரைகளில் கொரோனா நோயைத் தடுப்பதற்கான கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்கான நிதி ஆதாரத்தையோ, மக்கள் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டிருக்கிற கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கிற வகையிலோ நிதி ஒதுக்கீடுகளுக்கான எந்த அறிவிப்பும் அவரது உரையில் இல்லை.
ஏற்கெனவே 21 நாட்கள் ஊரடங்கை தொடர்ந்து மொத்தம் 40 நாட்களுக்கான மக்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். கொரோனா நோய் தடுப்புக்காக 40 நாட்களில் மருத்துவ சிகிச்சைகளை அளிக்கப்போவது குறித்தோ, நோயினால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதிக்கும் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தோ எந்த விதமான செயல் திட்டமும் இல்லை.
கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி நிலவரப்படி கொரோனா மருத்துவ சோதனையில் 10 லட்சம் பேருக்கு தேசிய சராசரியாக 105 பேருக்குத்தான் செய்யப்படுகிற வசதி உள்ளது. ஆனால், தென்கொரியாவில் 6,931, இத்தாலியில் 6,268, பிரிட்டன் 1,469, அமெரிக்கா 1,480 என்கிற எண்ணிக்கையில் சோதனை வசதிகள் உள்ளன. உலகத்திலேயே மிக மிகக் குறைவான சோதனை வசதிகள் கொண்ட நாடாக இந்தியா இருப்பது குறித்து பிரதமர் மோடி கவலைப்பட்டதாக தெரியவில்லை.
அதேபோல, கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்கவோ, பொருளாதாரப் பேரழிவிலிருந்து மக்களைப் பாதுகாக்கவோ எதிர்கால செயல்திட்டங்கள் எதையும் பிரதமர் உரையில் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்தியாவில் மொத்தம் பணியில் இருப்பவர்கள் 46.5 கோடி. இதில் அமைப்பு சார்ந்த பணியில் இருப்பவர்கள் 2.8 கோடி. அவர்களது வாழ்வாதாரத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.
ஆனால், அமைப்பு சாராத தொழிலாளர்களாக இருக்கிற 43 கோடி பேருக்கு எத்தகைய வாழ்வாதாரத்தை பிரதமர் மோடி வழங்கப்போகிறார் என்று நாடே எதிர்பார்க்கிறது. அவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மிகப்பெரிய அளவிலான நிதியை உடனடியாக ஒதுக்கப்படவில்லை எனில் மக்களிடையே பசி, பட்டினி, பஞ்சம் தலைவிரித்தாடி சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். நாடு எதிர்கொண்டு வருகிற பேராபத்தை பிரதமர் மோடி முற்றிலும் உணரவில்லை.
உலகத்தின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்கா கொரோனா நோயை தடுக்க அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமான 2 ட்ரில்லியன் டாலர், இந்திய மதிப்பில் ரூபாய் 248 லட்சம் கோடி ஒதுக்கியிருக்கிறது. ஆனால், 135 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் வெறும் ரூபாய் 15 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி ஒதுக்கியிருக்கிறார். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகும்.
மக்கள் ஊரடங்கு காரணமாக நாட்டில் நிலவுகிற பொருளாதாரப் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்கா ஒதுக்கியது போல இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத தொகையான ரூபாய் 20 லட்சம் கோடியை மத்திய பாஜக அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும்.
அப்படி ஒதுக்கப்படவில்லையெனில், 1943ஆம் ஆண்டில் ஏற்பட்ட வங்காளப் பஞ்சத்தில் மக்கள் எப்படி பசி பட்டினியால் லட்சக்கணக்கில் மடிந்தார்களோ, அப்படி ஒரு பேராபத்து இந்தியாவில் ஏற்படும் என்பதை பிரதமர் மோடி உணர வேண்டும் என்பதை மிகுந்த பொறுப்புணர்வோடு வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்" எனத் வலியுறுத்தியுள்ளார்.