கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி அமல்படுத்தியது. இது, வரும் 14ம் தேதியுடன் முடிகிறது. முடக்கத்தை அறிவித்து 16 நாட்கள் கடந்த நிலையில், கொரோனா பரவல் அதிகமாகி இருக்கிறதே தவிர, குறையவில்லை. குறிப்பாக, ‘சமூக தொற்று’ எனப்படும் அபாயகரமான 3ம் நிலையை நாடு எட்டிக் கொண்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே, கொரோனா பரவலை தடுப்பதற்காக மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் முடக்கத்தை நீட்டிப்பதா?, வேண்டாமா? என்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு, ஓரிரு நாட்களில் இது பற்றிய இறுதி முடிவை மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஊரடங்கை இரு வாரங்களுக்கு 30-4-2020 வரை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று தோன்றுகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள ப.சிதம்பரம், “இன்று முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி கலந்தாலோசிக்கிறார். ஊரடங்கை இரு வாரங்களுக்கு 30-4-2020 வரை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று தோன்றுகிறது.
ஊரடங்கு காலத்தில் மோடி அரசு ஏழைகளை மறந்துவிட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் தலா ரூ 5000 தந்தால் மொத்தச் செலவு ரூ 65,000 கோடி. இது நம்மால் முடியும், இதனைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.
என் பணிவான யோசனையை நம் முதலமைச்சர்களிடம் நான் தெரிவித்திருக்கிறேன். பிரதமரின் முடிவு என்னவென்று பார்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார். அதேப்போல் மற்றொரு ட்விட்டரில், மாநில முதல்வர்கள் பிரதமரிடம் சொல்லுங்கள் லைவ் முக்கியமானது போல ஏழைகளின் வாழ்க்கையும் முக்கியமானது என என்று குறிப்பிட்டுள்ளார்.