உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது தீவிரத்தைக் காட்டி வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை எட்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்களும், செவிலியர்களும், சுகாதாரப் பணியாளர்களும் இரவு பகல் பாராமல், உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றி வருகிறார்கள்.
அரசு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாத நிலையிலும், நாடு முழுவதுமுள்ள சுகாதாரப் பணியாளர்கள் மக்கள் நலன் கருதி இடையறாது பணியாற்றி வருகின்றனர். இவர்களைப் பாராட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆபத்தான சூழலில் அச்சமும், தவறான தகவலும் வைரஸைக் காட்டிலும் ஆபத்தானவை. ஆனால் சமூகப் பணியாளர்களான அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த ஆபத்தையும், சுகாதாரமாக இருப்பதன் அவசியத்தையும் எடுத்துக்கூறி விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்து வருகிறார்கள்.
இவர்கள் மிகவும் துணிச்சலாகவும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் மக்களுக்கும், சமூகத்துக்கும் பணியாற்றி கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் முன்னணி வீரர்களாக இருக்கிறார்கள்.
இந்த இக்கட்டான நேரத்தில் தேசத்துக்குச் சேவை செய்வதுதான் உண்மையான, தேசபக்தி. நம்முடைய சமுதாயப் பணியாளர்கள்தான் உண்மையான தேசபக்தர்கள். வெளி உலகில் அறியப்படாத ஹீரோக்கள், ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வராமல் உழைக்கிறார்கள். நமது குடும்பங்கள், உறவுகள், நண்பர்கள் பெரிய சிக்கலில் சிக்காமல் இருக்க பாதுகாக்கிறார்கள்.
இந்த சமூகப் பணியாளர்களின் தியாகத்துக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். இந்த தேசத்துக்கு சேவை செய்யும் ஒவ்வொரு சமூகப் பணியாளரையும் நான் வணங்குகிறேன். அவர்களின் குடும்பத்தினர் இந்த பெருந்தொற்றில் சிக்காமல் இருக்க பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவி்த்துள்ளார்.