பிரதமர் மோடியை கௌரவிக்கும் வகையில் இந்திய மக்கள் அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது.
இந்நிலையில், அந்தத் தகவலுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், வலைதளத்தில் பரவிய இந்தத் தகவல் தம்மை சிக்கலில் ஆழ்த்தும்படி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிரதமர் மோடி, கொரோனாவை தடுக்க அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதைக் காட்டும் விதமாக இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்கள் மக்கள் தமது வீடுகளில் மெழுகுவர்த்தி அல்லது அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு முன்னதாக கொரோனாவுக்கு சிகிச்சை அளித்துவரும் செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, வீட்டில் இருந்து கைதட்டுங்கள் என்று தெரிவித்திருந்தார்.
அவரது வேண்டுகோள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது. கைதட்டச் சொன்னதற்காக, கூட்டமாகக் கூடி ஊர்வலம் சென்றதும் அரங்கேறியது. விளக்கேற்றச் சொன்னதால் ஆங்காங்கே தீ விபத்துகளும் ஏற்பட்டன. பலர் பட்டாசுகளையும் வெடித்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியை கௌரவிக்கும் விதமாக அனைவரும் 5 நிமிடம் எழுந்து நில்லுங்கள் என ஒரு தகவல் பரவியதால் பிரதமர் மோடி, கலவரமடைந்து, உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “என்னை யாரும் சிக்கலில் மாட்டிவிட வேண்டாம். என்னை கௌரவிக்க விரும்பினால், ஒரு ஏழைக் குடும்பத்திற்கு உதவும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மோடியின் பேச்சை பா.ஜ.க-வினர் புரிந்துகொள்ளும் விதத்தாலேயே அவர் பதற்றமடைந்து உடனடியாக மறுப்பு தெரிவித்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.