உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் பா.ஜ.க அரசு தடுப்பு நடவடிக்கைகளில் திணறி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், நாடாளுமன்றக் கட்சி தலைவர்களுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில், மோடிக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தில் 30% பிடித்தம் என்ற மத்திய அமைச்சரவையின் முடிவை ஏற்றுக்கொண்டுள்ள சோனியா காந்தி, மேலும் செலவினங்களைக் குறைக்கும் வகையில் குடியரசுத்தலைவர், பிரதமர், அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் அனைத்தையும் நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இருக்கும் அனைத்து நிதியையும், பிரதமர் தேசிய நிவாரண நிதியின் கீழ் கொண்டு வந்து, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி எப்போதும் கைவசம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றிற்காக தொலைக்காட்சி, ஊடகங்களில் விளம்பரம் கொடுக்க ஆண்டுக்கு சராசரியாக ரூ. 1,250 கோடியை ஒதுக்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு அவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், டெல்லி மற்றும் நாடாளுமன்றத்தை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 20 ஆயிரம் கோடியை ரத்து செய்து, அதனை கொரோனா நிவாரண பணிகளுக்காக பயன்படுத்த வேண்டும். இப்போதுள்ள நாடாளுமன்றத்திலேயே பணிகளை மேற்கொள்ள முடியும். அதனை புதுப்பிப்பதற்கு அவசரம் ஒன்றும் ஏற்படவில்லை.
நாடாளுமன்றத்தை புதுப்பிப்பதற்கு பதிலாக அடிப்படை வசதிகளைக் கொண்ட புதிய மருத்துவமனையை கொரோனா நோயாளிகளுக்காக கட்டலாம். மருத்துவ பணியாளர் நலனுக்காக ரூ. 20 ஆயிரம் கோடியை பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.