கொரோனா வைரஸ் சமூக அளவில் பரவி விடக்கூடாது என்பதற்காக இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை தேசிய ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கை 1500 ஐ கடந்துள்ளது. ஆகையால் 21 நாட்கள் ஊரடங்குக்கு பிறகு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியானதை.
ஆனால் மத்திய அமைச்சரவை செயலாளர் இதனை முற்றிலும் மறுத்ததோடு 21 நாட்கள் ஊரடங்கை மேலும் நீட்டிக்கும் முடிவு ஏதும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படாவிட்டால் கொரோனா தொற்று சமூக அளவில் பரவில் மிக அதிகமான உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இந்திய ஆய்வாளர்கள் இருவர், கொரோனாவை கட்டுப்படுத்த 49 நாட்கள் தேவைப்படும் என தெரிவித்துள்ளனர்.
இயற்பியல் கோட்பாட்டுத் துறையைச் சேர்ந்த இருவர் கணிதவியல் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதில், 21 நாட்கள் ஊரடங்குக்கு பிறகு மீண்டும் கொரோனா வைரஸ் பரவாது என்பதற்கு எந்த உத்ரவாதமும் இல்லை. ஆகவே இந்த 21 நாட்களுக்கு பிறகு கொரோனா அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது என எச்சரிக்கின்றனர்.
ஆகவே, 21 நாட்களுக்கு பின்னர் மேலும் 28 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அதனிடையே தளர்வு விதிகளை மேற்கொண்டால் 49 நாட்கள் கொரோனாவை முற்றிலும் வெல்ல ஏதுவாக அமையும் என கூறுகின்றனர். அவ்வாறு நடைமுறைப்படுத்தாவிடில் புதிய நோய்த்தொற்று அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, உலக அளவில் அமெரிக்காவில்தான் 1.5 லட்சத்தினர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருப்பதால் அந்நாட்டில் ஏப்ரல் 30ம் தேதி வரை லாக் டவுன் உத்தரவை அதிபர் ட்ரம்ப் நீட்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.