கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 748-லிருந்து 834 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 19 பேர் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு, கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. மேலும் சுகாராதார பணியாளர்கள், மருத்துவதுறை ஊழியர்கள், தூய்மைப்பணியாளர் என பலரும் தங்களின் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். இதனிடையே மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை அதிகாரி தனது தாய் இறந்த செய்தி தெரிந்த பின்பும் தனது கொரோனா தடுப்புப் பணியை மேற்கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரஃப் அலி. இவர் போபால் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களின் பொறுப்பாளராக உள்ளார். இவர் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக போபால் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், இவர் நேற்றைய தினம் பணி வந்த சிலமணி நேரத்திலேயே அவரது தாயார் இறந்துவிட்டதாக செய்தி வந்துள்ளது. இதனால் சிறிது நேரம் என்ன செய்வது என்றே தெரியாமல் உறைந்து போன அஷ்ரஃப் அலி, தனது துக்கத்தை வெளிக்காட்டாமல் கொரோனா தடுப்பு பணியை தொடர்ந்தார்.
பின்னர் பணியை முடித்துவிட்டு இறுதாக தனது தாயாரின் இறுதி சங்கிற்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த சம்பவமும் உடன் வேலைப் பார்க்கும் சக ஊழியர்களுக்கும் தாமதமாகதான் தெரிந்துள்ளது. இதனிடையே அஷ்ரஃப் அலி மீண்டும் பணிக்கு வந்துள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் அஷ்ரஃப் அலியிடம் பேட்டி கண்டது. அந்த பேட்டியில், “ஒருவருக்கு தனது தாயைவிட மதிப்புமிக்கது வேறு எதுவும் இருக்கமுடியாது; தாய்க்கு அடுத்து தாய் நாடுதான். எனது தாயை நேசிக்கும் அளவிற்கு எனது தாய் நாட்டையும் நேசிக்கிறேன்.
காலை 8 மணிக்கு பணிக்கு வந்தபோது எனக்கு தகவல் கிடைத்தது. ஆனால், என் நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமை கண்முன்னே நிறையே இருந்தது. எனது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு முடிந்தளவு எனது பணியை முடித்துவிட்டு இறுதி சடங்கிற்கு சென்றேன்.
பின்னர் மீண்டும் தற்போது பணிக்கு வந்துவிட்டேன்” என கண்ணீரும் சிரிப்புமாக பேட்டி கொடுத்துள்ளார். அவரின் இந்த நடவடிக்கை அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.