கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவை தவிர மக்கள் வேறு எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த 20 நாள் ஊரடங்கால் சிறு, குறு வியாபாரிகள், தினக்கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் என பலரின் அன்றாட வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கும். ஆகவே அவர்களுக்கான நிவாரண நிதியை மத்திய மோடி அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
அவ்வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தினக்கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசுக்கு கோரிக்கை வைத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், நாடு தற்போது கொரோனா வைரஸால் போரை சந்தித்து வருகிறது. இருப்பினும் இதன் தாக்கத்தை கட்டுப்படுத்தும் மிகப்பெரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. ஆனால், இந்த போரில் இருந்து உயிரிழப்புகளை குறைக்க இரண்டு கூறுகள் உள்ளன.
ஒன்று கொரோனாவை சமாளித்தல். மற்றொன்று பொருளாதாரம்.
1) * கொரோனா வைரஸில் இருந்து தப்பிப்பதற்கு அதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு பூரண சிகிச்சையளிக்க வேண்டும்.
* நகர்ப்புறங்களில் விரிவான மருத்துவ வசதியை ஏற்படுத்த வேண்டும். ஐ.சி.யூ வசதி கொண்ட அவசர கால மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும்.
2) * கோவிட்-19 பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு ரேசன் பொருட்களை இலவசமாகவும், அவர்களின் வாழ்வாதாரத்துக்கான பணத்தேவையை அவர்களது வங்கிக்கணக்கிலும் செலுத்த வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால் பேரழிவே மிஞ்சும்.
* தொழிற்சாலைகள் முடக்கப்பட்டதால், சிறு, குறு வணிகர்களுக்கான வரிச்சலுகையை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் அரசு தங்களுக்கு ஆதரவளிக்கிறது எனும் நம்பிக்கையை வணிகர்கள் பெறவேண்டும். இவ்வாறு அரசு செய்வதன் மூலம் வேலை இழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.
என ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.