உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 70 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 4 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, நாளை நாடு முழுவதும் ‘மக்கள் ஊரடங்கு’ முறை கடைபிடிக்கப்பட இருக்கிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா 2-வது கட்டத்தில் உள்ளது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆனால், உண்மையில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கக்கூடும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எந்தவொரு தொற்று நோய் பரவலையும் நான்கு கட்டங்களாக பிரிக்கலாம். முதல் கட்டம் : வைரஸ் எங்கிருந்து வந்தது எனத் தெளிவாகத் தெரியும். உதாரணமாக, தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓமன் நாட்டிலிருந்து வந்தவர்.
இரண்டாவது நிலை : வைரஸ் பாதித்த இடங்களுக்குச் சென்றவர்கள் அங்கு செல்லாதவர்களுக்கு பரப்புதல். இந்த கட்டத்தில் Contact tracing மூலம் யார் மூலமாக பரவியது எனக் கண்டறிய முடியும். உதாரணமாக, டெல்லியில் உயிரிழந்த 68 வயது மூதாட்டிக்கு, சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி சென்றதால் வைரஸ் பாதித்த தனது மகனிடமிருந்து வைரஸ் பரவியது.
மூன்றாம் நிலை : சமூக பரவல். யாரிடமிருந்து வைரஸ் பரவியது என்பதைக் கண்டறிய முடியாது. இந்த நிலையில், யாரிடமிருந்தும், யாருக்கு வேண்டுமானாலும் பரவும் அபாயகரமான சூழல் ஏற்படும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நபருக்கு எங்கிருந்து வைரஸ் பரவியிருக்கக் கூடும் என்பதை அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. எனவே நாம் நோய் பரவலின் மூன்றாவது கட்டத்தை ஏற்கெனவே அடைந்துவிட்டோமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயரப்போகிறது என்று சில மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் மார்பு அறுவை சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் அரவிந்த்குமார் கூறுகையில், “நாம் இன்னும் 2-வது கட்டத்தில் இருக்கிறோம் என்று நினைக்கும் மக்கள் உண்மையில் கண்களை மூடிக்கொண்டுள்ளனர் என்றுதான் சொல்லவேண்டும்.
கொரோனா தொற்று சமூகத்தில் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் காத்திருக்கிறது. நிலைமை மிகமோசமாக இருக்கிறது.” எனத் தெரிவித்திருக்கிறார்.