உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவை தொற்றியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவின் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக முடக்கியுள்ளது.
தொற்று நோயாக பரவும் இந்த வைரஸைக் கட்டுப்படுத்தம் முயற்சியில் அரசு தீவிரம் காட்டிவருகிறது. ஆனாலும் அதன் பாதிப்பை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த சூழலில் நேற்று முன்தினம் காணொலி காட்சியின் மூலம் நாட்டு மக்களை சந்தித்தார் பிரதமர் மோடி.
அவரின் சந்திப்பின் போது மக்கள் சுயதேசிய ஊரடங்கு( Janata Curfew) உத்தரவை கடைப்பிடிக்கும்படி கேட்டுக்கொண்டார். வைரஸ் பாதிப்பு தீவிரம் அடையும் போது தொடர்சியாக ஊரடங்கு உத்தரவைக் கொண்டுவருவதற்கான முன்னோட்டம் என்பதே அவர் இதை அறிவித்ததன் நோக்கம்.
ஆனால் வழக்கம் போல மோடி எதை அறிவித்தாலும் அதுவே உலகத்தின் தலைசிறந்த அறிவிப்பு என கருதி, பல போலி செய்திகளையும், வதந்திகளையும் புராணக் கட்டுகதைகளையும் திரித்து சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். இந்த வதந்தியை பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவு கட்சிகளும் சில கும்பல்களும் தொடர்சியாக செய்துவருகிறது.
அந்தவகையில் பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவு மூலம் கொரோனா அழியும் என்றும், கொரோனா வைரஸின் ஆயுட்கலாம் 12 மணிநேரம் என்பதால்,14 நேரம் மக்கள் வீட்டுக்குள் இருக்க சொல்லியிருக்கிறார் என்றும், இதனால் வைரஸின் சங்கிலித் தொடரை இல்லாமல் செய்ய முடியும் என்று வதந்தியை பரப்பி வருகின்றனர்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்தும் இந்த வதந்தியை பரப்பி வருகிறார். அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 12 முதல் 14 மணி நேரம் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தினால் முன்றாவது கட்டத்திற்கு செல்லாமல் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
உண்மையாகவே கொரோனா வைரஸின் ஆயுட்காலம் எவ்வளவு என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியில், புதிய கொரோனா வைரஸ் (COVID-19) பல மணி நேரம் காற்றிலும் சில மேற்பரப்புகளிலும் 2 - 3 நாட்கள் வரை வாழ முடியும் என்று தெரிவிக்கிறது.
பாதிக்கப்பட்ட நபரின் இருமல் பிறர் மீது படுவதால் வைரஸ் அந்த நபரையும் தொற்றிக்கொள்ளும். குறைந்தபட்சம் காற்றில் 3 மணி நேரம் கொரோனா வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும். செம்பு உலோகத்தின் மேற்பரப்பில் 4 மணி நேரம் வரை, அட்டைப் பெட்டியில் 24 மணி நேரம் வரை, பிளாஸ்டிக் மற்றும் எஃகு பொருட்களின் மேற்பரப்பில் 2-3 நாட்கள், உடையில் 9 மணி நேரம் வரை கொரோனா உயிர்ப்புடன் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சராசரியாக, பிளாஸ்டிக் மேற்பரப்பில் வைரஸின் அரை ஆயுள் மிக அதிகமாக இருந்தது, சராசரியாக 15.9 மணிநேரம் அதிகபடியாக 19.2 மணிநேரமும், தாமிரம் 3.4 மணிநேரம் முதல் அதிகபடியாக 5.11 மணிநேரம் மற்றும் துருப்பிடிக்காத எஃகு 13.1 மணிநேர முதல் 16.1 மணிநேரம் இருக்கும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
காற்று வழியாகவும், பாதிக்கப்பட்டவர்களால் மாசுபடுத்தப்பட்ட விஷயங்களைத் தொடுவதிலிருந்தும், நேரடி மனித தொடர்பு மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்றும் ஆய்வு கூறுகிறது. இந்த வைரஸ் முன்னர் HCoV-19 என அழைக்கப்பட்டது, ஆனால் இந்த ஆய்வில் SARS-CoV2 என குறிப்பிடப்படுகிறது.
இறுதியாக, 12 மணிநேர நீண்ட ஆயுள் குறித்த கூற்று தவறானது. வைரஸ் ஒரு பொருளின் மேற்பரப்பில் அதிக நேரம் நீடிக்கிறது. இதனை பா.ஜ.க ஆதரவாளர்களும் நடிகர் ரஜினிகாந்த் புரிந்துக்கொள்ளவேண்டும்.