அயோத்தி வழக்கு, ரபேல் ஊழல் வழக்கு போன்ற முக்கிய வழக்குகளைக் கையாண்ட, உச்ச நீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். தற்போது அவரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்ற மாநிலங்களவையின் நியமன எம்.பியாக அறிவித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
குடியரசுத் தலைவருக்கு மொத்தம் 12 பேரை மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கும் அதிகாரம் உள்ளது. அதன்படி, தற்போது காலியாக உள்ள ஒரு இடத்துக்கு ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராக ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. ஏனெனில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அப்போதையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் தீர்ப்பளித்ததால் இந்த பதவியை மத்திய பா.ஜ.க அரசு கொடுத்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
அதுபோல, ரஃபேல் ஒப்பந்த முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்களை ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது. மேலும், உச்ச நீதிமன்ற பெண் ஊழியர் ரஞ்சன் கோகாய் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்திருந்தார். பின்னர் அந்த புகாரில் ரஞ்சன் கோகாய் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டது.
இந்த விவகாரங்கள் அனைத்தும் மத்திய பாஜக அரசின் கொள்கைகளுக்கு சாதகமாக ரஞ்சன் கோகாய் தீர்ப்பளித்துள்ளதால் அவரை எம்.பியாக நியமித்துள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஏற்கக்கூடாது என தெரிவித்துள்ளார். அவ்வாறு ஏற்றால், நீதித்துறையில் அவருக்கு கிடைத்த புகழுக்கு பெரும் களங்கம் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, ரஞ்சன் கோகாயின் சகோதரர் ஓய்வுப்பெற்ற விமானப்படை தளபதியான அஞ்சன் கோகாயை வடகிழக்கு பிராந்திய கவுன்சில் உறுப்பினராக கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு நியமித்தது.
இது நீதித்துறைக்கு மோசமான முன்னுதாரணமாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சதாசிவம், 2014ம் ஆண்டு கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டது இதே போல மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.