உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை நிலைகுலையச் செய்துள்ளது. இந்த வைரஸ் கிருமி இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் தற்போது வரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து கேரளா பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கேளிக்கை அரங்குகளை முடக்கியுள்ளது. சுகாதாரத்துறை இதற்கான பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக தற்போது, கேரள மாநில மக்களுக்கு கை சுத்திகரிப்பு மருந்துகள் தயாரிக்க அம்மாநில மருத்துவ சேவைகள் கழகம் முடிவெடுத்தது. அதுவும் 10 நாட்களில் ஒரு லட்சம் Sanitizer பாட்டில்களை உற்பத்தி செய்யும் நோக்கில், கேரள மாநில மருந்துகள் உற்பத்தி அமைப்பு கை சுத்திகரிப்பு மருந்துகளை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக கொரோனா பரவுவதைத் தவிர்க்க 'Break The Chain' என்ற திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா டீச்சர் கூறுகையில், “கொரோனா வைரஸ் தொற்று சங்கிலித் தொடர்போல் பரவி வருகிறது.
அதனால் இந்த சங்கிலி பிணைப்பை உடைக்க ‘Break The Chain’ என்ற திட்டத்தைக் கொண்டுவந்துள்ளோம். அதன்படி ஒவ்வொரு தனியார் மற்றும் பொது இடங்களில் பூத் அமைக்கப்படும். அந்த பூத்தில் சென்று கைகளைக் கழுவிக்கொண்டுதான் செல்லவேண்டும். கிருமி பரவலைக் கட்டுப்படுத்த Hand Sanitizer-ஐ கட்டாயம் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் முகக் கவசம் (Mask) தட்டுப்பாட்டைத் தவிர்க்க, சிறைச்சாலையில் உள்ள கைதி தொழிலாளர்கள் மூலம் மாஸ்க் தயாரிக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது” என தெரிவித்தார். அரசின் இந்த திட்டங்களுக்கு அம்மாநில மக்கள் ஒத்துழைப்பும், வரவேற்பும் அளித்துவருகின்றனர். இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் கேரளாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.