சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸின் தாக்குதலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி வரும் இந்தச் சூழலில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் சில கும்பல்களும், சங்கி அமைப்புகளும் கொரோனா வைரஸை பயன்படுத்தி கல்லா கட்டும் முயற்சிகளில் “இந்த மூலிகை சாப்பிட்டால் கொரோனா வராது”, “இதைச் செய்தால் கொரோனா பரவாது” என்பது போன்ற வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் கொரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் பிற்போக்கு கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.
சமீபத்தில் பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்தின் முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத், “ஒருவர் யோகா செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் அவர்கள் கொரோனா வைரஸ் உள்ளிட்ட தாக்குதலுக்கு பயப்படவேண்டாம்” எனப் பேசியுள்ளார்.
இந்நிலையில், Tea Party அதாவது தேநீர் விருந்து நடத்துவது போல ‘கோமிய விருந்து’ (Gaumutra Party) நடத்தப் போவதாக இந்து மகாசபை கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதன்படி மாட்டின் கோமியம் குடிப்பதற்காக டெல்லியில் ஒரு நிகழ்ச்சியை இந்து மகாசபை ஏற்பாடு செய்துள்ளது.
அந்த நிகழ்ச்சியின் போது பூஜை செய்து, அடுக்கி வைக்கப்பட்ட கோமியம் நிரப்பப்பட்ட டம்ளர்களை கையில் எடுத்து ’கொரோனா வராது’ என முழக்கங்களை எழுப்பி அதை ஒரே மூச்சில் குடித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந்து மகாசபா உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
இதுதொடர்பான வீடியோ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால், டெல்லி அரசு மிக அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், இந்து மகா சபையின் இந்த நடவடிக்கை பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.