கோவிட்-19 எனும் ஆட்கொல்லி கொரோனா வைரஸால் உலகளவில் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் பரவத் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் சுமார் 100க்கும் மேற்பட்ட நாட்டு மக்களிடம் பரவி நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக கொரோனா பாதித்த நாடுகளுக்கான வான்வழி, கடல்வழி போக்குவரத்து கதவுகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக இத்தாலியில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் தனது பரவலைத் தொடங்கியுள்ளது. 81 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டதோடு, கல்வி நிலையங்களை மூடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், கேரளா, பீகார், சத்திஸ்கர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் கர்நாடகாவில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அம்மாநில மக்களுக்கு கடும் எச்சரிக்கையும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கர்நாடகாவில் அடுத்த ஒருவார காலத்திற்கு திரையரங்குகள், வணிக வளாகங்கள், மால்கள் ஆகியவை மூடப்பட வேண்டும் என்று எடியூரப்பா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், திருமண நிகழ்ச்சிகளுக்கும், விளையாட்டு நிகழ்வுகளுக்கும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுபோல பீகார் மாநிலத்தில் மார்ச் 31 வரை பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டதால் அதுவரை அரசுப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் வங்கிக்கணக்குக்கு மதிய உணவுக்கான தொகை அனுப்பி வைக்கப்படும் என நிதிஷ்குமார் அரசு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்திலும் காலவரம்பின்றி பள்ளிகள் மூடப்படும் என கமல்நாத் அறிவித்துள்ளார்.
முன்னதாக, டெல்லியில் நடக்கவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், கலை நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டும் வருகிறது. உச்சநீதிமன்றத்தில் முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் மட்டுமே செயல்படும். வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் தவிர வேறு எவருக்கும் அனுமதி இல்லை என உச்சநீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.
இப்படி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இப்படி இருக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அ.தி.மு.க அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்ததாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.
அதற்குப் பிறகு பாதிக்கப்பட்ட நபர் என்னவானார், அவரைச் சார்ந்தவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று எவ்வித குறிப்பும் இதுவரை தமிழக அரசு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.