இந்தியாவில் தேர்தலின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி நடத்திவந்த ஒரு மாநில அரசை மத்திய அரசாங்கம் தனக்கிருக்கும் பலத்தைக் கொண்டு வீழ்த்துவது தொடர்கதையாகிவிட்டது.
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் வேலையில் தற்போது பா.ஜ.க இறங்கியுள்ளது. மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்துவந்த ஜோதிராதித்ய சிந்தியா தற்போது பா.ஜ.கவில் இணைந்துள்ளார்.
முன்னதாக ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 22 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கமல்நாத் தலைமையில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு கவிழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ.க-வின் குதிரைபேர அரசியலே காரணம் எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி மோடியை டேக் செய்து ட்விட்டர் பதிவில் சாடியுள்ளார். அந்தப் பதிவில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்ப்பதில் நீங்கள் தீவிரமாகச் செயல்படுகிறீர்கள்.
அதேநேரத்தில், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை 35 சதவீதம் சரிந்துள்ளது. இதனை நீங்கள் கவனிக்காமல் இருக்கலாம். இந்நிலையில் பெட்ரோல் விலையை 60 ரூபாய்க்கு கீழே குறைத்தால் மக்கள் பயனடைவார்கள். அதற்கு முயற்சி எதுவும் எடுப்பீர்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.