சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியா, ஜப்பான், இத்தாலி, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் பணியில் அந்தந்த நாடுகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் பல்வேறு வகையான விழிப்புணர்வு பிரச்சாரங்களையும், கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் குறித்தும், முன்னெச்சரிக்கை பற்றியும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக செல்போன் காலர் டியூன் வழியாக விழிப்புணர்வு செய்து வருகிறது மத்திய அரசு.
அதாவது, ஒருவருக்கு போன் செய்யும்போது வழக்கமான ரிங்குக்கு பதிலாக கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு அறிவிப்புகள், தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ளிடவவை அந்தக் காலர் டியூனில் இடம்பெற்றுள்ளன.
ஆனால், இந்த விழிப்புணர்வு வாசகமானது அந்தந்த மாநில மொழிகளில் இல்லாமல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. இதனால் மக்கள் எரிச்சலடைந்து அந்த விழிப்புணர்வு விளம்பரத்தைக் கேட்பதைத் தவிர்த்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, விழிப்புணர்வு வாசகம் வருவதற்கு முன்பே கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் இருமல் சத்தம் எழுப்பப்படுகிறது. அதைக் கேட்கும் பலருக்கும் அச்சம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ”மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அதேபோன்று நம்பிக்கையையும் ஏற்படுத்தவேண்டும். தற்போது உள்ள காலர்டியூன் விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் அச்சத்தை மட்டுமே ஏற்படுத்துவதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர்.
இந்தி மற்றும் ஆங்கில மொழிக்கு மாற்றாக அந்தந்த மாநில மொழியில் இருந்தால் மட்டுமே அனைத்து மக்களுக்கும் புரியும். அதன்மூலம் மக்களுக்கும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு சென்றடையும்.
எனவே காலர் டியூன் தமிழ் மொழியிலும், நம்பிக்கை தரும் வகையில் இருக்கும்படி அமைக்கவேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசு எடுத்து மாநில மொழிகளிலும் விழிப்புணர்வு விளம்பரத்தை இடம்பெறச் செய்யவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.