மோடி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து கடுமையான பொருளாதாரச் சரிவை இந்தியா சந்தித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்கிகளும் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
வங்கியில் கடன் வாங்கியவர்கள் திருப்பி அளிக்காமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடியதன் விளைவாக வங்கிகள் முடங்கும் அவல நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழலில் கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதம் மட்டுமே.
இதில் நாளுக்கு நாள் பங்குச் சந்தைகளும் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அதன் காரணமாக முதலீட்டாளர்கள் ஒரே நாளில் 7.72 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பைச் சந்தித்துள்ளனர்.
இந்நிலையில் நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சியை 5.3 சதவிகிதமாக ‘மூடிஸ்’ நிறுவனம் குறைத்துள்ளது. சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
முன்னதாக வெளியிட்டிருந்த பொருளாதார வளர்ச்சி கணிப்பில் இருந்து தற்போது மதிப்பைக் குறைத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மூடிஸ் நிறுவனம், கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் எனக் கூறியிருந்தது.
பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம், ஜி.டி.பி மதிப்பை 6.2 சதவிகிதம் என்று 0.6 புள்ளிகளைக் குறைத்தது. அதனையடுத்து, நவம்பரில் வெளியிட்ட அறிக்கையில் முந்தைய கணிப்பிலிருந்த மதிப்பை குறைத்து 5.4 சதவிகிதத்திற்கு கொண்டு சென்றது. முன்பு, 5.4 சதவிகிதமாக ஜி.டி.பி-யை மதிப்பிட்டிருந்த மூடிஸ், தற்போது 0.1 புள்ளியைக் குறைத்துள்ளது.
இதே போல் ‘ஜி20’ நாடுகளுக்கான வளர்ச்சி கணிப்புகளையும் மூடிஸ் 2.1 சதவிகிதமாக திருத்தியுள்ளது. சீனாவின் வளர்ச்சி கணிப்பினை 4.8 சதவிகிதமாக குறைத்துள்ளது. முன்பு இதனை 5.2 சதவிகிதம் என்று மூடிஸ் கணித்திருந்தது.
சர்வதேச அளவில், பொருளாதார மந்தநிலை வாட்டி வதைத்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு, பொருளாதாரத்தை மேலும் ஆட்டம் காண வைத்துள்ளது. இதனைக் கணக்கில் கொண்டே ஜி.டி.பி கணிப்பை மூடிஸ் குறைத்துள்ளது.
‘மூடிஸ்’ நிறுவனத்தின் குறைக்கப்பட்ட வளர்ச்சிக் கணிப்பினால் தற்போது குறைந்து வரும் பங்கு வர்த்தகம் மேலும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.