மலேசியாவின் எட்டாவது பிரதமராக பதவி ஏற்றுள்ள மொகைதின் யாசின் திங்கட்கிழமையன்று தனது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார். அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தமிழர்.
கடந்த சில நாட்களாக மலேசியா அரசியல் பரபரப்பாக இருந்து வந்த நிலையில், உள்துறை அமைச்சராக இருந்த மொகைதின் யாசின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு பல்வேறு அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு தமது அமைச்சரவையை பிரதமர் மொகைதன் யாசின் அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, மலேசியாவில் முதன்முறையாக புதிய அமைச்சரவையில் துணைப் பிரதமராக யாரும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், புதிதாக 31 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில், இந்திய வம்சாவளியைச் சார்ந்த இருவர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழரும் மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக எட்மண்ட் சந்தாரா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்தியா வம்சாவளியினர் மலேசியாவில் அமைச்சரானதற்கு பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மலேசியாவில் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் டத்தோ ஶ்ரீ சரவணனுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “டத்தோ ஶ்ரீ சரவணனுக்கு வாழ்த்துகள்! மலேசியாவின் புதிய அமைச்சரவைப் பட்டியலை பிரதமர் மொகைதின் யாசின் அறிவித்துள்ளார். இதில் மனிதவளத் துறை கேபினட் அமைச்சராக டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மலேசியன் இந்தியன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டத்தோ ஶ்ரீ சரவணன், மலேசியாவில் அமைச்சராகி இருப்பது தமிழர்களுக்குக் கிடைத்த பெருமை. மலேசியாவுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட அவரை வாழ்த்துகிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.