மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார நிலை வரலாறு காணாத வகையில் கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால், அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள்.
பல்வேறு தொழில் துறைகளின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, ஏற்றுமதி இறக்குமதியிலும் சரிவு காணப்பட்டு வருகிறது. இதனால் வங்கிகளில் வாராக்கடன் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
நிலைமை இப்படி இருக்கையில், மோடி அரசோ, நாட்டில் பொருளாதார மந்தநிலையே இல்லை எனக் கூறி வருவதோடு, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், வாராக்கடனால் கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வந்த பிரபல தனியார் வங்கியான யெஸ் வங்கி முழுவதையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இதனால் அதன் வாடிக்கையாளர்கள் திக்குமுக்காடி போயுள்ளனர்.
இதேபோல, அடுத்தடுத்து தனியார் வங்கிகள் திவாலானதாக அறிவிக்கப்பட்டு ரிசர்வ் வங்கி வசமாக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதில், ஆக்சிஸ், ஐசிஐசிஐ, பேங்க் ஆஃப் பரோடா, எச்.டி.எஃப்.சி போன்ற வங்கிகள் அடிபடும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பா.ஜ.கவின் மாநிலங்களவை உறுப்பினரும், பொருளாதார வல்லுநருமான சுப்பிரமணிய சுவாமி மத்திய அரசின் தனியார் மயமாக்கல் நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வங்கிகளின் வாராக்கடன் தொடர்பாக 2015ம் ஆண்டே எச்சரித்திருந்தேன். அதுபோல YES வங்கியின் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளது. இதேபோல அடுத்தடுத்து திவால் ஆகவிருக்கும் வங்கிகளின் எண்ணிக்கை 10-ஐ தாண்டும். அந்த வரிசையில் ஆக்சிஸ் வங்கியும் இருக்கிறது என சூசகமாகத் தெரிவித்திருக்கிறார்.
பொருளாதார மந்தநிலையை சரிவர கையாளாமல் வங்கிகளை ஆர்பிஐ வசமாக்குவதில் எந்த பயனும் இருந்துவிடப் போவதில்லை என்ற பாணியில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டிருக்கிறார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனையடுத்து, மோடி அரசு திறனற்ற அரசு என்பதை இப்போதாவது ஒப்புக்கொள்கிறீர்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.