மோடி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து கடுமையான பொருளாதாரச் சரிவை இந்தியா சந்தித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்கிகளும் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
வங்கியில் கடன் வாங்கியவர்கள் திருப்பி அளிக்காமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடியதன் விளைவாக வங்கிகள் முடங்கும் அவல நிலை உருவானது. குறிப்பாக, வாராக்கடன் மதிப்பு 4,300 கோடி ரூபாயாக அதிகரித்து பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி திவாலானது.
இந்நிலையில் அதனைத் தொடர்ந்து ‘யெஸ் வங்கி’ கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. வாராக்கடன் அதிகரித்து கடுமையான நிதி சிக்கலில் தவித்து வந்த ‘யெஸ் வங்கி’ முழுவதையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது.
யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி கைப்பற்றியது வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நிதித்துறை நிறுவனங்களை நிர்வகித்து ஒழுங்குபடுத்தும் திறன் மத்திய பா.ஜ.க அரசுக்கு இல்லை என்பது அம்பலமாகிவிட்டதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கடந்த 6 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் உள்ளது. நிதித்துறை நிறுவனங்களை நிர்வகித்து ஒழுங்குபடுத்தும் திறன் மத்திய பா.ஜ.க அரசுக்கு இல்லை என்பது அம்பலமாகிவிட்டது.
முதலில் பி.எம்.பி வங்கி. தற்போது, யெஸ் வங்கி. இதுகுறித்து இந்த அரசாங்கத்திற்கு அக்கறை இருக்கிறதா?, அல்லது அதன் பொறுப்பில் இருந்து விலகுகிறதா? இந்த வரிசையில் முன்றாவது வங்கி ஏதேனும் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “YES வங்கி, NO வங்கியானது” என பா.ஜ.க அரசை கிண்டல் செய்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியும் அவரது கொள்கைகளும் இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைத்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.