சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தென்கொரியா, ஈரான், இத்தாலி என பல்வேறு நாடுகளைத் தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்த மக்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையே கொரோனா வராமல் தடுக்கவும், நோய் பாதிப்பு ஏற்பட்டால் குணப்படுத்தவும் சில பொருட்கள் உதவும் எனக் கூறி சமூக வலைதளங்களில் வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவி வருவதால் முகக்கவசங்கள் (Mask), கிருமி நாசினிகளின் தேவை அதிகரித்ததால் அதற்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதனால், வியாபாரிகள் ‘மாஸ்க்’, சானிடைசர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் எதிரொலியை அடுத்து, அரசியல் லாபம் பார்க்க களமிறங்கியுள்ளனர் மேற்கு வங்க மாநில பா.ஜ.கவினர். அதன்படி, மக்களுக்கு ‘மாஸ்க்’ வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிலும், சர்ஜிக்கல் மாஸ்க் போன்று இல்லாமல் துணியாலான மாஸ்க்குகளையே வழங்குகின்றனர்.
அந்த மாஸ்க்கை பயன்படுத்துவதால் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும், ’கொரோனா ஒழிப்பு’ சேவையில் ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காக அதனை வழங்கி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், அந்த மாஸ்க்குகளில் பா.ஜ.கவின் தாமரை சின்னத்தையும், மோடியின் பெயரையும் அச்சிட்டு வழங்கிவருகிறார்கள் பா.ஜ.கவினர்.
ஏற்கெனவே கஜா புயல் பாதிப்பின்போது மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண பொருட்களில் அ.தி.மு.கவினர் தங்களது கட்சிச் சின்னங்களையும், எடப்பாடி பழனிசாமியின் போட்டோக்களையும் அச்சிட்டு வழங்கியது பெரும் விவாதத்திற்கு உள்ளானது.
அவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல எனக் காட்டும் விதமாக மோடி பெயர் கொண்ட ‘மாஸ்க்’களை பா.ஜ.கவினர் வழங்கிவருவது மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.