மோடி அரசாங்கம் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தை சீர்குழைக்க பா.ஜ.க நிர்வாகிகள் இந்துத்வா கும்பலைத் தூண்டிவிட்டு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர்.
இந்துத்வா கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் 42 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறைக்கு பா.ஜ.கவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் உள்ளிட்டோரே காரணம் என போராட்டக்காரர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் இருக்கும் கட்சியில் இனி இருக்கமாட்டேன் எனக் கூறி பா.ஜ.கவில் இருந்து மேற்கு வங்க நடிக்கை சுபத்ரா முகர்ஜி விலகியுள்ளார்.
இதுதொடர்பாக சுபத்ரா முகர்ஜி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “பா.ஜ.க தான் நினைத்துபோல் அதன் பாதையில் செல்லவில்லை. மதத்தால் மக்களைப் பிரித்து வெறுப்புணர்வை விதைக்கும் வேலையைச் செய்யும் நோக்கில் பா.ஜ.க செயல்படுகிறது. அதுவே பா.ஜ.கவின் சித்தாந்தமாக மாறியதாக உணர்கிறேன்.
தற்போது கூட டெல்லியில் நடந்து என்ன? நிறைய அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். பலரது வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. கலவரம் மூலம் மக்களை பிளவுபடுத்தியுள்ளார்கள். அதற்குக் காரணம் பா.ஜ.கவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் உள்ளிட்டோரின் வெறுக்கத்தக்க பேச்சுக்களே! ஆனாலும் அவர்கள் மீது பா.ஜ.க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் கட்சியில் என்ன நடக்கிறது?
டெல்லி கலவரம் என்னை நிலைகுலையச் செய்தது. வெறுப்பு பேச்சுகளால் ஆதாயம் தேடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத கட்சியில் இனி இருக்கமாட்டேன். அவர்கள் இருக்கும் கட்சியில் இருக்கக்கூடாது என முடிவெடித்து எனது ராஜினாமா முடிவை தற்போது கையில் எடுத்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.