வடகிழக்கு டெல்லியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சி.ஏ.ஏ ஆதரவாளர்களின் வன்முறை வெறியாட்டம் நாட்டையே உலுக்கி எடுத்து வருகிறது. இவை அனைத்திற்கும் காரணகர்த்தாவாக இருந்தது என்னவோ பா.ஜ.கவினர் கலவரத்தைத் தூண்டும் விதமாகப் பேசியதுதான். ஆனால், அவர்களை எல்லாம் விட்டுவிட்டு அப்பாவி மக்கள் மீதே வழக்கம்போல் பழி சுமத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது இந்துத்வா கும்பல் நடத்திய தாக்குதலின் போது டெல்லி உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மாவும் பலியானார். சந்த்பாக் பகுதியில் இருந்த பாதாள சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டது அங்கித் சர்மாவின் உடல். அதன் பிறகு உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு மிகப்பெரிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதில் அவர் தாக்குதலின் போது அடிபட்டு உயிரிழக்கவில்லை என்றும் அவரது உடலில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது வெறும் வன்முறையால் மட்டும் நிகழ்ந்தாக தெரியவில்லை. மிகவும் கொடூரமாக அங்கித் சர்மா கொலை செய்யப்பட்டிருக்கிறார் என பிரேத பரிசோதனையில் ஈடுபட்ட மருத்துவர்கள் கூறியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதனையடுத்து, அங்கித் சர்மா இறப்பு குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என அவரது தந்தையும் உளவுத்துறை அதிகாரியுமான ரவீந்தர் சர்மா புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் விசாரிக்கப்பட்டதில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தாஹீர் உசைன் என்ற நபர் மீது கொலை மற்றும் வன்முறையில் தீ வைத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மியில் இருந்து தாஹீர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். மேலும், பா.ஜ.கவின் கபில் மிஸ்ரா இது தொடர்பாக பேசிய போது, தாஹீர் உசைனும் அவரது ஆட்களே அங்கித்தை கற்கள், தடிகள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்திருக்கிறார்கள் என குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் மறுத்துள்ள தாஹீர் உசைன், வன்முறை நடந்த பிப்ரவரி 24ம் தேதியன்று எனது வீட்டுக்குல் சில கும்பல் புகுந்து என்னையும் என் குடும்பத்தினரையும் தாக்க முயன்றது. அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகவே வீட்டின் கூரை மீதேறி கையில் கட்டையுடன் நின்றுக்கொண்டிருந்தேன். பிறகு, என் குடும்பத்தாருடன் பாதுகாப்பு கருதி வெளியேறிவிட்டேன் என கூறியுள்ளார்.
ஏற்கெனவே டெல்லியில் நடந்த வன்முறையை இந்துத்வ குண்டர்கள் திட்டமிட்டே அரங்கேற்றியது தெரியவந்தது. அதுபோல, அங்கித் சர்மாவையும் கொன்றுவிட்டு இஸ்லாமியரான தாஹீர் உசைன் மீது பழி போட பா.ஜ.க முயற்சிக்கிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.